தினசரி நாம் சாப்பிடும் உணவில் பூண்டு சேர்த்து உண்பதால் உணவுக்கு மணமும் சுவையும் கிடைப்பதுடன் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இதிலுள்ள மருத்துவ குணங்களின் பயன் அறிந்து, பூண்டை உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களும் தங்கள் உணவில் சேர்த்து உண்டு வருகின்றனர். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும்போது அதிக நன்மைகள் கிடைக்கும். தினசரி மதிய உணவுக்கு முன் மூன்று பூண்டுப் பற்களை பச்சையாக உண்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பூண்டு இதயத்துக்கு இதம் தரும் ஓர் அற்புத உணவு. இதை தினசரி உட்கொண்டு வந்தால் இதய நோய் வரும் அபாயம் குறையும். இதிலுள்ள சல்ஃபர் என்ற கூட்டுப் பொருள் தேவைக்கு அதிகமான உடல் கொழுப்பின் அளவையும் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையச் செய்து இதயத்தைக் காக்கும்.
2. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீரேடிகல்களை எதிர்த்துப் போராடி, கேன்சர் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
3. பூண்டு ஒரு இயற்கை முறை ஆன்டிபயாடிக். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது பலவித தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை வலுவாக்க உதவும்.
4. பூண்டை தினசரி உட்கொண்டு வந்தால் சாதாரண சளி, இருமல் போன்ற நோய்கள் வருவதைத் தடுத்து நிறுத்தலாம்.
5. ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி பூண்டு உட்கொண்டால், பூண்டிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது அவர்களின் வலியை குறையச் செய்யும். மேலும், அந்த நோயுடன் சம்பந்தப்பட்ட மற்ற அசௌகரியங்களும் குறைய உதவும்.
6. பூண்டு செரிமானத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க உதவி புரியும். மேலும், ஜீரண மண்டல உறுப்புகளில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவி புரியும். இதனால் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்படுவது சாத்தியமாகும்.
7. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கத் தேவைப்படும் வைட்டமின்களும் மினரல்களும் பூண்டில் அதிகளவு நிறைந்துள்ளன. மதிய உணவுக்கு முன் பூண்டுப் பற்கள் சாப்பிடுவதால், உடலிலுள்ள நோய்கள் விரைவில் குணமாகும். தொற்று நோய்க் கிருமிகள் உடலுக்குள் பரவுவதும் தடுக்கப்படும்.
8. பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பிற்குள் இருக்கும் கனிமச் சத்துக்களை அதிகரிக்கச் செய்து எலும்புகள் வலுவடைய உதவும். இதனால் ஆஸ்டியோபொரோஸிஸ் நோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.
9. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் சருமத்திலுள்ள கறைகளை நீக்கவும், சருமம் பளபளப்பு பெறவும் உதவும்.
10. பூண்டு மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவி புரிந்து அதிகமாக உள்ள கொழுப்பை கரையச் செய்யும். இதனால் உடல் எடை அதிகமாகாமல் பராமரிக்கலாம். இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் பூண்டு உதவும்.
இத்தனை நன்மை தரும் பூண்டினை அனைவரும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நலம் பெறுவோம்.