இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.
ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வீட்டையெல்லாம் இடிப்பதில்லை. இறந்தவர் தங்கியிருந்த இடத்தில், அவர் அன்றாடம் உபயோகித்த பொருள்களை வைத்து, குறிப்பிட்ட அடைப்பு காலம் வரை மாலைநேரத்தில் தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
அடைப்பு காலம் முடிந்ததும் நதி மற்றும் கடல் தீரங்களுக்குச் சென்று ஏற்றிய விளக்கு, அவர் உபயோகித்த பொருள்களை நீரில் சேர்த்துவிட்டு சாந்தி செய்கிறார்கள். தற்போது இன்னும் எளிதாக அடைப்பு காலத்தில் ஒருவர் இறந்தால் ஒரு புதிய வெண்கலக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி அதை தானம் செய்து விடுகிறார்கள்.
தனிஷ்டா பஞ்சமியின் நட்சத்திரங்கள் 13. அதன்படி இந்த 13 நட்சத்திரங்களில் இறந்து போனவர்கள், மேலுலகம் செல்வதற்குத் தடை ஏற்படும். இதை ‘அடைப்பு’ என்று பாமர மக்கள் சொல்கிறார்கள். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்துபோனவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு உண்டாகும். ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு அந்த ஆன்மா மேலுலகம் செல்ல முடியாமல் இங்கேயே இருந்து அலையும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
ஒரு ஆன்மா எந்த நட்சத்திரத்தில் வெளியேறுகிறதோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே மேலுலகம் செல்வதாகச் சொல்லப்படுகிறது. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் தவிர மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் எந்தத் தடையும் இன்றி எளிதாக மேலுலகம் அடைகிறார்கள். அடைப்பு கொண்ட ஆன்மாக்கள் மட்டும் அமைதியின்றி அலைகின்றன என்று கருடபுராணமும் உறுதிப்படுத்துகின்றது.
மேலும் அடைப்பு காலத்தில் இறந்தவரை அன்றே சூரியன் மறைவதற்குள் தகனம் செய்துவிட வேண்டும். குளிகை காலம் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அந்தப் பிணத்தைத் தகனம் செய்யும்போது தர்ப்பை அல்லது அருகம்புல்லால் ஆன 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைப்பவர் கையால் எரித்து விட வேண்டும். இல்லையெனில் ஒரு தேங்காயை மயானத்தில் உடைக்க வேண்டும். அசைவம் உண்பவர்கள் என்றால் கோழி அல்லது சேவலை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கட்டி கொண்டு போய் இடுகாட்டில் வேலை செய்பவரிடம் ஒப்படைப்பதுண்டு. அல்லது பிணத்துடன் புதைப்பதுண்டு.
இப்படி அடைப்பு உள்ள நேரங்களில் இறந்துபோனவர்கள் மேலுலகம் செல்லாமல் அலைவதால் இறந்து போனவர் வீட்டில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களுக்காக முறையான பரிகாரங்களைக் செய்யாவிட்டால் தனிஷ்டா என்ற துர்தேவதை இறந்தவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் என்றும் சொல்கிறார்கள். இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் இறந்துவிட்டால் உடனடியாக நட்சத்திரம் பார்த்து அதற்கேற்ற பரிகாரங்களைச் செய்துவந்தார்கள். முக்கியமாக இந்த அடைப்பு காலம் முடியும்வரை வீட்டைப் பூட்டி வைத்திருப்பார்கள்.
ஒருவர் இறந்தவுடனே அவர் தங்கிய வீட்டை அடைத்துவிட்டு சுவரை இடித்து வேறுவழியாகப் பிணத்தை எடுத்துக் கொண்டு வருவது, கூரையைப் பிரித்து கொண்டுவருவது போன்ற கடுமையான பரிகாரமெல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காகக் கடைபிடித்திருக்கிறார்கள்.
அடைப்பு காலத்தில் இறந்தவருக்கு ஈமகாரியம் செய்பவர்களுக்கு எந்தத் தீங்கும் நேராதபடிக்கு உரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என்று சித்தர் நூல்களும் கூறுகின்றன.
‘இறந்து விட்டால் வீட்டை அடைக்க நாளை கேளாய்
இயல்பான அவிட்டமோடு சதயம் பின்னும்
சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி
செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது
திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்’
‘வீட்டைக் குமிந்த நட்சத்திரங்கட்கு
வினைதீர மறுபக்கம் சுவர் இடித்துக்
கூடவே அவ்வழியாய் பிரேதந் தன்னைக்
கொண்டுவரில் வீடடைக்கத் தேவையில்லை.
தேடவே சாந்தி செய்யில் வீடிடிக்கத்
தேவையில்லை நேர்வழி யாயெடுக்கலாகும்’
இது போன்ற பல பாடல்கள் தனிஷ்டா பஞ்சமி கருத்தையும் அடைப்பு நாள் குறித்தும் சொல்கின்றன. இன்றும் தென்மாவட்ட கிராமங்களில் ஒருவர் இறந்து போனவுடன், அவர் உறவுகள் இறந்தவர் எந்த வழியாக உயிரை விட்டார் என்று பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தையும் செய்வது உண்டு.
கண், காது, பாதம் என 10 வழிகளில் வெளியேறும் உயிருக்கு ஏற்ப பரிகாரங்களைச் செய்கிறார்கள். இதனால் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது என்றும் நம்புகிறார்கள். இறந்தவர் படுத்திருந்த இடத்தில் நிறை சொம்பில் நீர் வைத்து, தீபம் ஏற்றி வருவார்கள். அடைப்புக் காலங்களில் நற்காரியங்களைச் செய்வதில்லை. தினமும் விளக்கேற்ற வேண்டும் என்பதால் வெளியூருக்கும் செல்வதில்லை. அசைவம் உண்பதில்லை எனப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அடைப்பு காலம் முடிந்தபிறகே எட்டு படைப்பு போன்றவை நடைபெறும். இந்த அடைப்பு சடங்கு முறை, சமயம் தோன்றுவதற்கு முன்பு இருந்த, ‘ஆவி வழிபாட்டு முறை’யில் இருந்து தோன்றியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது போன்ற நம்பிக்கைகள் நல்லவையோ கெட்டவையோ, அது அவரவர் நம்பிக்கை. எந்தப் பிரச்னையாயினும் இறையருள் நிச்சயம் நம்மைக் காக்கும் என்பதை மட்டும் ஆழமாய் நம்புவோம்!