பிரம்ம ஞானிகளுக்குச் சர்வ வாசனைகளும் சூனியமாகும். மெளனத்தை விட உயர்ந்தது யாதொன்றும் இல்லை. மெளனம் என்றால் பிரபஞ்ச தர்மசம்பந்தங்களை விட்டுச் சகல சங்கல்பங்களையும் ஒழித்து பிரம்ம சொரூபனாயிருக்கப் பட்டவனுக்கு ஆனந்தத்தைக்
கொடுக்கும். இந்த மெளனமே “தியானம்’ – என்று சொல்லப்படும்.
மெளனம் என்றால் யாருடனும் பேசாமல் வாய்மூடிக் கொண்டிருப்பது அன்று. மனத்தை வெளியில் விடாமல் நிறுத்துவதே மெளனம் ஆகும்.
“பால்யம்” – என்றால் சிரவணம். “பாண்டித்தியம்” – என்றால் மனனம். “மெளனம்” – என்றால் நிதித்தியாசனம், இம்மூன்றையும் விட்டுத் தன்னைத் தான் மறந்து பிரம்ம
சொரூபியாக இருப்பதே மெளனம்.
கடாகாசம், மஹாகாசம் ஊகமாவது போல் ஆத்மாவே பரப்பிரம்மம் என்றும், பரப்பிரம்மமே “ஆத்மா” – என்றும் ஐக்கிய பாவத்தை அடைந்து, ஆத்ம சொரூபியாகிய, நீயே பிரம்மமென்று நிச்சயித்துச் சகல எண்ணங்களையும் மறந்து கல்சிலை வடிவமாய் ஆனந்தப்படுவதே மெளனபாகும்.
வாசனைத் திரவியங்களும், மோட்சத்தின் இச்சையும் விட்டு, உலகம் அனைத்தும் “அசத்தியம்” – என்றும், “பிரம்மமே சத்தியம்” – என்றும், பிரம்மத்தைத் தியானிக்க வேண்டும். பிறகு அந்தத் தியானத்தையும் விட்டு மனோ புத்திகள் இரண்டையும்
சஞ்சலமில்லாமல், அசையாமல், திடமாக நிறுத்தி, இருதயத்திலிருக்கும் காமக் குரோதாதிகளாகிய அழுக்குகளை எல்லாம் நீக்கி, மனத்தை நிர்மலமாகச் செய்து கொண்டு அந்தப் பரப்பிரம்மமே நானென்றும், நானே சர்வமென்றும் மெளனமாகவும், அமைதியாகவும் இருப்பதே பரமசுகம்.
ஆத்ம சொரூபியாகிய நானே பிரம்மமென்று ஐக்கிய பாவத்தில் திடமாய் நின்று, சகலமனோ விருத்திகளும், சூனியமாய் எந்த எண்ணங்களும் இல்லாமல் கண்களுக்குக்
காணப்படும் சகல பொருட்களும், சகல எண்ணங்களும் மறந்து, தானே தானாகச் சக்தி மாந்தனாய் இருப்பதே சமாதியாகும்.