சுவாசத்தை நாசிகளில்‌ மாற்றும்‌ முறை – சரவித்தை – 2

இடது நாசியிலிருக்கும்‌ சுவாசத்தை வலது நாசியில்‌ மாற்ற வேண்டுமானால்‌ இடது காலின்‌ பேரில்‌ வலது காலைச்‌ சமமாக வைத்து உட்கார்ந்து கொண்டு, இடது கையைப்‌ பூமியில்‌ ஊன்றி வலது கால்‌ பெரு நரம்பைக்‌ கணுக்காலிடம்‌ வலது கை நடு விரலால்‌ அசைத்துக்‌ கொண்டே இருக்கவேண்டும்‌.

சூரிய நாடியில்‌ அதாவது, வலது நாசியில்‌ மாறி விடும்‌. வலது நாசியில்‌ இருக்கும்‌ சுவாசத்தை இடது நாசிக்கு மாற்ற வேண்டுமானால்‌ மேலே கூறியதுபோல்‌ வலதுகாலின்‌ மேல்‌ இடது காலைச்‌ சமமாக வைத்து வலது கையைப்‌ பூமியில்‌ ஊன்றி இடது கை நடு விரலால்‌ இடது கால்‌ பெரு விரல்‌ பெரு நரம்பைக்‌ கணுக்காலிடம்‌ முன்‌ அசைத்ததுபோல்‌ அசைத்துக்‌ கொண்டே இருந்தால்‌ சந்திர நாடியில்‌ அதாவது இடது நாசியில்‌ மாறும்‌.

இவ்விரண்டும்‌ மாறுமிடம்‌ புருவ மத்தியாகிய நெற்றியில்‌ தாமரைக்‌ கொடியிலுள்ள நூலைப்‌ போன்ற மிகவும்‌ “தந்திரங்கள்‌” உண்டு. அதுதான்‌ சந்திரநாடி, சூரியநாடி, சுழிமுனை நாடிகள்‌ மூன்றும்‌ கலக்குமிடமாகும்‌. அவ்விடம்தான்‌ சச்சிதானந்தம்‌
என்ற உண்மை அறிவுடன்‌ இருக்கும்‌ ஆனந்தமிடமாகும்‌. மேலும்‌, உட்கார்ந்து, யோக தண்டமாகிலும்‌ அல்லது தனக்குத்‌ தகுந்த உயரமுள்ள மனையாகிலும்‌ வலது அக்குளில்‌
வைத்துக்‌ கொண்டு அக்குளின்‌ நரம்பு ஊன்றும்படி அழுத்தினால்‌ சில நிமிடங்களில்‌ வலது நாசியிலிருக்கும்‌ சுவாசம்‌ இடது நாசிக்கு மாறும்‌. அல்லது அக்குளுக்கும்‌, முழங்கைக்கும்‌ மத்தியிலும்‌ வைத்து நரம்பை ஊன்றினாலும்‌ மாறும்‌. சுவாசம்‌ எப்பொழுதும்‌ சூரிய நாடியில்‌ இருப்பதற்காகவே யோகிகள்‌ எப்பொழுதும்‌ யோக தண்டத்தை தமக்கு இடது அக்குளில்‌ வைத்திருக்கிறார்கள்‌.

சுவாசத்திற்கு வாசி என்றும்‌ பெயருண்டு. இந்த வாசியை மாற்றுவதனால்‌ அந்த யோக தண்டத்திற்கு “வாசிக்கோல்‌” – என்றும்‌ பெயர்‌ வந்தது. சாதாரணமாய்‌ உட்கார்ந்திருக்கும் போதும்‌, சந்திர நாடியில்‌ இருக்கும் போதும்‌ சந்திர நாடியில்‌ இருக்கும்‌ சுவாசத்தைச்‌ சூரிய நாடியில்‌ மாற்ற வேண்டுமானால்‌ இடது கையைப்‌ பூமியிலூன்றி இடது பக்க முதுகை மட்டும்‌ சுவரில்‌ சாய்த்துக்‌ கொண்டிருந்தால்‌ சந்திர நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சூரிய நாடிக்கு மாறும்‌. சூரிய நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சந்திர நாடிக்கு மாற்ற வேண்டுமானால்‌
வலது கையைப்‌ பூமியிலூன்றி வலது பக்க முதுகை மட்டும்‌ சுவரில்‌ சாய்த்துக்‌ கொண்டிருந்தால்‌ சூரிய நாடியிலிருக்கும்‌ சுவாசம்‌ சந்திரநாடிக்கு மாறும்‌.

படுக்கையில்‌ சூரியநாடியிலிருக்கும்‌ சுவாசத்தைச்‌ சந்திரநாடிக்கு மாற்றவேண்டுமானால்‌ வலதுபக்கத்தில்‌ ஓரே பக்கமாகப்‌ படுத்து வலதுகையைத்‌ தலைக்குக்‌ கீழ்வைத்துக்‌
கொண்டிருந்தால்‌ சுவாசம்‌ சூரிய நாடியிலிருந்து சந்திர நாடிக்கு மாறும்‌. சந்திர நாடியிலிருக்கும்‌ சுவாசத்தைச்‌ சூரியநாடிக்கு மாற்றவேண்டுமானால்‌ இடதுபக்கத்தில்‌ ஒரே பக்கமாகப்‌ படுத்து இடதுகையைத்‌ தலைக்குக்‌ கீழ்வைத்துக்‌ கொண்டிருந்தால்‌ சுவாசம்‌ சந்திரநாடியிலிருந்து சூரியநாடிக்கு மாறும்‌.

வழியில்‌ நடக்கும்போது குடை, துண்டு இவற்றில்‌ எதுவாயினும்‌ பந்தாகச்‌ சுற்றி இடது அக்குளில்‌ வைத்துக்‌ கொண்டு சென்றால்‌ சுவாசமானது சூரிய நாடியிலேயே இருக்கும்‌. சந்திர நாடியில்‌ இருக்க வேண்டுமானால்‌ மேலே கூறியதுபோல்‌ குடை, துண்டு இவற்றில்‌ ஏதுவாயினும்‌ பந்தாகச்‌ சுற்றி வலது அக்குளில்‌ வைத்துக்‌ கொண்டு சென்றால்‌ சுவாசமானது சந்திர நாடியிலேயே இருக்கும்‌. இந்த மகா இரகசியங்களை முன்‌ சொல்லியதுபோல்‌ சிலகாலம்‌ செய்து வந்தால்‌ நிமிடத்திற்கு இரண்டு மூன்று முறை சுவாசத்தை அந்தந்த இராசிக்கு மாற்றலாம்‌.

முன்‌ சொல்லியதுபோல்‌ அந்தந்த நாட்களில்‌ காலை 4 மணி முதல்‌ 6 மணி வரையில்‌ சுவாசம்‌ மாற்றிக்‌ கொண்டே இருக்கவேண்டும்‌. இதில்‌ சொல்லிய சுவாசத்தைக்‌ கடைப்‌
பிடிப்பவர்கள்‌ எவ்வித ஆபத்துக்களுக்கும்‌ இடமில்லாமல்‌ எப்போதும்‌ ஆனந்தமாக இருப்பார்கள்‌. சுவாசமானது சர்வ உயிர்களின்‌ தேக மத்தியில்‌ பிராணவாயுவிலிருந்து அனுபவப்‌ பூர்வமாக அதாவது, உசுவாச நிசுவாசங்களாய்‌ ஊர்த்துவ முகமாகத்‌ தலை கீழாய்‌ நாபியிலிருந்து புறப்பட்டு மூக்கின்‌ ரந்திரங்களின்‌ வழியாக மேலும்‌ கீழும்‌, கீழும்‌ மேலுமாக ஆடிக்‌ கொண்டிருக்கும்‌. அபானவாயு பூரக வடிவமாகவும்‌, அதோமுகமாகவும்‌ (கீழ்ப்புறமாக) திரிந்து கொண்டிருக்கும்‌. இவ்விரண்டிற்கும்‌ மத்தியில்‌ இருப்பதே ஆத்மாவாகும்‌.

பிரதிமாதம்‌ அமாவாசை, பிரதமை, துவிதியை இந்நாட்களில்‌ இரவும்‌ பகலும்‌ சூரியநாடியில்‌ செலுத்தினால்‌ அம்மாதமெல்லாம்‌ நன்மையைத்‌ தரும்‌. பிரதிவருடம்‌
சித்திரைமாதம்‌ அமாவாசை, பிரதமை, துவிதியை இம்மூன்று நாட்களிலும்‌ மேலே கூறியதுபோல்‌ சுவாசத்தைச்‌, சூரியநாடியில்‌ செலுத்தினால்‌ அவ்வருடம்‌ முழுவதும்‌ சுகத்தைத்‌ தரும்‌. இவற்றை அனுபவத்தால்‌ காணமுடியும்‌.



    Comments are closed.

    © 2020 Spirituality