#சர_சாஸ்திரம்#சாஸ்திரம்
மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு “சந்திரகலை” என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.
இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.
வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகுமாம்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.
இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான ஒன்று.
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே.
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக நமசிவய என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி திருமூலர், சிவவாக்கியர்,
காகபுஜண்டர், வள்ளலார்.,., என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில் உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும், அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட
பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட
உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும்
அறிந்தனர்.
“ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார்
முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள்
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து பேரான
பூரணத்தைத் நினைவாய்க் காரு வாச்சப்பா
பூரணத்தைக் காக்கும் பேர்கள் வாசிநடு
மையத்துள் வாழ்வார் தானே”
அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள் பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர் சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே
பதிஎண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார். நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய
இறைவனை பிடிக்கலாம்.
தன்னையறிய தலைவனையறியும் முறையாகும். மேலும் இந்த உடலை யந்திரம் எனவும், சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுதண்டையே குறிக்கும்.
அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய இடங்களையோ அல்லது தலை மற்றும் மூளையின் சிறு பகுதியோ அல்லது முழுவதுமான வடிவத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை
கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலி ஒளி
அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது.
எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்தி பெரும். சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்??
நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத தன்மையை கொண்டே செயல்படுகின்றது. அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம்.
பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு.
அவைகளில் சுவையை கொண்டு அறிவது, கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில்
தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள்
உண்டு.
” பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும்
பரிவான அப்புதனில் வலத்தே யோடும்
சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும்
திறமான வாயுதனில் நேரா யோடும் ஒரப்பா
அந்தரத்தில் மேலே யோடும் ஒன்றேனும்
குறைவுப்படாது உற்றுநோக்கி ஆரப்பா
இந்நூலைப் பார்பார் கேட்பார் அறிவான
மூமின்கட்கருள் செய்தோமே”.
இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது
மூச்சானது கீழ்நோக்கி(பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி
(நிலம்) சரமாகும்.
அதுபோல் மூச்சானது இடகலையில் அல்லது பிங்கலையில் என
எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு(நீர்) சரமாகும்.
அதே போல் வலது பக்கமாக சாய்ந்து ஓடினால் தேயு(தீ) சரமாகும்.
மூச்சானது ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு(காற்று) சரமாகும்.
வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல் நோக்கி சென்றாலும்,
உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும்.
இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
1.) நாம் அசையா வேளையில் பிருதிவியும்,
2.) அசையும் வேளையில் அப்புவும்,
3.) கஷ்ட வேளையில் தீயும்,
4.) நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு வேளையில் காற்று சரமோடும்.
5.) அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.
மேலும்
அ) பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும்,
ஆ) அமரபட்ச வியாழனில் நெருப்பும்,
இ) வெள்ளி நீரும்,
ஈ) புதன் காற்றும்,
உ) சனிக்கிழமை ஆகாய சரமும்
மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும்
அ) ஞாயிறு நீர் சரமும்,
ஆ) திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தீ சரமும்,
இ) புதன் பூமியும்,
ஈ) வெள்ளி காற்றும்,
உ) சனி ஆகாய சார்ந்த சரம் நடப்பது மிக்க நல்லது.
பொதுவாக
1.) ஒருவருக்கு மண் மற்றும் நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ
குணமுடையவராவார்.
மேலும்
2.) ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும் போது உண்டாகும்.
3.) எனவே அதை கவனித்து பக்தியில் மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம்
நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன்.
4.) ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை நெருங்கியவன்.
5.) (அ) தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும், (ஆ) நீர் சரம் தானதர்ம
செய்பவனுக்கும், (இ) மண் சரம் ஓடினால் அவன் உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.
மேலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும்.
சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க விரைவில் அது எளிதாக முடியும்.
மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன.
ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில்
கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும்
அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.
இதுவரை சரசாஸ்திரம் ஓரளவு நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப்
பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த
பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம்.
அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசர மூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதி அந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர முடியும்.
மேலும் இடது 25யும், வலது 25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும் சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி
கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.
சிதம்பர சக்கரத்தை தெரிந்து கொள்வதற்கு முன், நமசிவய மந்திரத்தில்
ந – நிலமாகவும், ம – நீராகவும், சி – நெருப்பாகவும், வ – காற்றாகவும், ய – ஆகாயமாகவும் உள்ளன.
இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன
அ) ந – நிலம் – பொன் – சதுரம் – தித்திப்பு – 12 அங்குலம்,
ஆ) ம – நீர் – வெண்மை – பிறை வடிவம் – துவர்ப்பு – 16 அங்குலம்,
இ) சி – தீ – சிகப்பு – முக்கோணம் – உவர்ப்பு – 8 அங்குலம்,
ஈ) வ – காற்று – கருப்பு – அறுகோணம் – புளிப்பு – 4 அங்குலம்,
உ) ஆகாயம் – பச்சை – வட்டம் – கார்ப்பு – 1 அங்குலமாகும்.
இவற்றில்
அ) நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும்.
இதேபோல்
ஆ) நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25
கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர
சக்கரமாகும்.
ஆடி 1
——–
சரவித்தை என்ற சுவாசக் கலையில் இந்நாள் மிகவும் முக்கியமான நாள்.
நாள் உதயம் என்பது இந்திய மரபில் சூரிய உதயத்தைக் கொண்டே கணக்கிடப்படுகின்றது, இரவு 12 மணி என்பதை அல்ல. இந்நாளில் உங்கள் சுவாசத்தை சூரியகலையான வலது கலையில் தொடங்கினால் வருடத்தில் எல்லா நாட்களும் சரமாகிய சுவாசம் சரியாக ஓடி வாழ்க்கையில் எல்லா நலங்களையும் தரும்.
இந்நாளில் சூரிய உதயத்திற்குமுன் எழுந்து, உங்கள் சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றது
என்பதை கவனியுங்கள். ஒரு வேலை வலது பக்கம் ஓடவில்லை என்றால், இடது பக்கமாக திரும்பி படுத்து, இடது கையை மடித்து தலைக்கு கீழே வைத்து, கால்களை நீட்டி வலது கையை வலது தொடை மீது வைத்துக்கொண்டு உங்கள் சுவாசத்தை
கவனித்தால், தானாகவே சுவாசம் வலது கலைக்கு மாறி கொள்ளும் அல்லது நிமிர்ந்து
உட்கார்ந்து இடது தொடை மீது வலது காலைப் போட்டு உட்கார்ந்தால் போதுமானது.
இந்நாளில் உங்கள் சுவாசத்தை காலை 6 முதல் மாலை 6 வரை வலதுகலையில்
ஓடசெய்தால் மிக்க பலன் தரும் (இடது மூக்கில் சுத்தமான பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்). அப்படி முடியாத பட்சத்தில் சுவாசக் கலையை சூரிய கலையான வலதில் தொடங்கினால் நல்லது.
இந்த ஒரு நாள் இதை கடைபிடித்தால் வருடத்தில் எல்லா நாட்களும் பல நன்மை
உண்டு என்பது நிச்சயம். இதை படிப்பதோடு விட்டுவிடாமல் செயலிலும்,செயலோடு
விட்டுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து அனைவரும் நன்மை அடைய உதவுங்கள்.
சரவித்தை தெரிந்தவர்கள் யாரும் இதை வெளியே சொல்வது இல்லை.
– சித்தர்கள் தபோவனம்